மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: பரிசுத்தொகை வரலாறு காணாத உயர்வு! முழு விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சாதனை அளவில் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 60 நாட்களே உள்ள நிலையில், கோப்பைக்கான பயணத்தை இன்று (ஏப்ரல் 13) ஐசிசி முறைப்படி தொடங்கியது. கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுமார் ₹74 கோடியுடன் (7.9 மில்லியன் டாலர்) ஒப்பிடும்போது, இந்த முறை 10% உயர்வுடன் சுமார் ₹81.83 கோடி (8.7 மில்லியன் டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
பரிசுத் தொகை
வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசு?
2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குச் சுமார் ₹21.84 கோடி ($2,340,000) பரிசுத்தொகையாகக் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்குச் சுமார் ₹10.92 கோடியும் ($1,170,000), அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்குத் தலா ₹6.30 கோடியும் ($675,000) வழங்கப்படும். இது தவிர, குரூப் நிலையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ₹29 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் தலா ₹2.31 கோடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட்
மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் ஐசிசி
இந்த பரிசுத்தொகை உயர்வு குறித்து ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது. முதல்முறையாக 12 அணிகளுடன் உலகக்கோப்பையை விரிவுபடுத்தியிருப்பதும், பரிசுத்தொகையை அதிகரித்திருப்பதும் உலகளாவிய அளவில் இந்த விளையாட்டை வலுப்படுத்தும் எங்களது உறுதிப்பாட்டைப் பறைசாற்றுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் விளையாட்டு வீரர்களின் ஆதிக்கம் உலக அரங்கில் அதிகரித்து வருவதையே இந்த முதலீடுகள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 12
ஜூன் 12 முதல் தொடங்கும் மகளிர் கிரிக்கெட் திருவிழா
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாரம்பரியமான மைதானங்களில் ஜூன் 12 முதல் இந்தத் தொடர் தொடங்குகிறது. 12 அணிகள் பங்கேற்பதால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும், அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை இந்தப் போட்டி ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய தாக்கத்தை இந்த 2026 உலகக்கோப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.