மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. 2020 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இதே ஆஸ்திரேலியாவிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதற்கு சரியான பழிக்கு பழியாக, தற்போதைய மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் உறுதியுடன் இந்திய அணி உள்ளது. போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா புள்ளி விபரங்கள்
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் நாக் அவுட் போட்டிகளை நடத்துகிறது. இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் மொத்தம் 150 ஆகும். இங்கு விளையாடிய 35 டி20 போட்டிகளில் சேஸிங் அணிகள் 21ல் வெற்றி பெற்றுள்ளன. மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் ஏற்றவாறு சம நிலையில் உள்ளது. மகளிர் டி20களில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 22-6 என வெற்றி-தோல்வி சாதனையைக் கொண்டு வலுவாக உள்ளது. 2022 பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியும் இதில் அடங்கும்.