சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 200 ரன்களுக்குள் இந்திய பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தது. சேஸிங் எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு ஓவர்களுக்குள்ளாகவே மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பில் குவிக்கப்பட்ட 165 ரன்களில், 85 ரன்களை விராட் கோலி அடித்திருந்தார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி:
இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட 85 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் முறியிடித்திருக்கிறார் 'கிங்' கோலி. தன்னுடைய கிரிக்கெட் கரியரில், குறைந்த ஓவர் ஐசிசி தொடர்களில் (சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 ஐசிசி தொடர்கள்), 58 இன்னிங்ஸ்களில் 2,719 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின் டென்டுல்கர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 85 ரன்களைக் குவித்து, சச்சினின் இந்த சாதனையை முறியடித்திருக்கிறார் கோலி. குறைந்த ஓவர் ஐசிசி தொடர்களில், 64 இன்னிங்ஸ்களில் 2,785 ரன்களைக் குவித்து சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் கோலி. இந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.