இந்தியாவில் தான் ஒருநாள் உலகக்கோப்பை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி பேச்சுவார்த்தை!
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியா வருவதை உறுதி செய்ய ஐசிசி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும் பாகிஸ்தானின் லாகூரில் முகாமிட்டுள்ளனர். அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் தேசிய அணி பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து சில உறுதிமொழிகளைப் பெறுவதற்காக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜியோஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூர் சென்றுள்ளனர். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுக்கக் கூடாது என நஜீம் சேத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுப்பதன் பின்னணி
ஆகஸ்ட்-செப்டெம்பரில் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ உறுதியாக தெரிவித்துவிட்டது. இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்தும் ஹைபிரிட் முறையை முன்மொழிந்துள்ளது. அதற்கும் பிசிசிஐ இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில், ஆசிய கோப்பை போட்டி குறித்த எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை என்றால், தாங்களும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வரமாட்டோம் எனவும், தங்கள் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடுநிலை மைதானங்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.