ICC Rankings : ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை அரையிறுதியில் சதம் மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதம் ஆகியவற்றின் மூலம், தரவரிசையில் கிடுகிடுவென முன்னேறிய விராட் கோலி, புதன்கிழமை (நவம்பர் 22) ஐசிசி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார். இதற்கிடையே, முதலிடத்தில் ஷுப்மன் கில் நீடிக்கும் நிலையில், உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ள நிலையில், டாப் 4 இடங்களில் மூன்று இந்தியர்கள் உள்ளனர்.
பந்துவீச்சு தரவரிசையில் பின்தங்கிய இந்திய வீரர்கள்
ஒருநாள் உலகக்கோப்பை நடந்தபோது ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய முகமது சிராஜ், அந்த தொடரின்போதே கேஷவ் மகாராஜால் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். இந்நிலையில், தற்போது ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாம் இடத்தை கைப்பற்றிய நிலையில், சிராஜ் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ரா நான்காவது இடத்தில் தொடரும் நிலையில், குல்தீப் யாதவ் ஐந்தாவது இடத்திலும், முகமது ஷமி பத்தாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் ஒரே இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா பத்தாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இந்தியராக ஹர்திக் பாண்டியா 16வது இடத்தில் உள்ளார்.