
ஐசிசி டி20 தரவரிசை : அசைக்க முடியாத இடத்தில் சூர்யகுமார்; அசுர வளர்ச்சி கண்ட ரிங்கு சிங்
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (டிசம்பர் 13) வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர் ரிங்கு சிங் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் ஏற்கனவே டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் கூடுதலாக 19 புள்ளிகளை பெற்று, 865 ரேட்டிங் புள்ளிகளை கொண்டுள்ளார்.
இதன் மூலம், தனக்கு அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை விட 88 புள்ளிகள் முன்னிலையுடன், யாரும் அசைக்க முடியாத வகையில் வலுவாக முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ICC T20I Rankings Rinku Singh enters in top 100
டாப் 100 இடங்களுக்குள் நுழைந்த ரிங்கு சிங்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 68 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை ரிங்கு சிங் பதிவு செய்தார்.
மேலும், இதன் மூலம் 46 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக டாப் 100 இடங்களுக்குள் வந்துள்ளார்.
தற்போது 464 ரேட்டிங் புள்ளிகளுடன் அவர் 59வது இடத்தில் உள்ளார். இதற்கிடையே பேட்டிங்கில் டாப் 10 இடங்களுக்குள் ருதுராஜ் கெய்க்வாட் ஏழாவது இடத்தில் உள்ளார்.
மேலும் பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரவி பிஷ்னோய் முதலிடத்தில் நீடிப்பதோடு, ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், காயத்தால் ஓய்வில் உள்ள ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தில் உள்ளார்.