ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!
வியாழன் (மே 11) அன்று வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் அணி ஒருநாள் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஐசிசி தரவரிசையில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர அப்டேட்டை தொடர்ந்து முன்னர் 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது 118 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக நான்கு புள்ளிகளை பெற்று 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா ஏற்கனவே 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 புள்ளிகளை மட்டும் பெற்று 115 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின்தங்கிவிட்டது.
ஐசிசி வருடாந்திர தரவரிசைக்கான கணக்கீடு
ஐசிசியின் வருடாந்திர தரவரிசையானது மே 2020 முதல் நடந்த அனைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்களையும் கணக்கில் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 2022 க்கு முன் முடிக்கப்பட்ட தொடர்களுக்கு 50 சதவிகித வெயிட்டேஜும் அதன் பின்னர் நடந்த அனைத்து தொடர்களுக்கும் 100 சதவிகித வெயிட்டேஜும் கொடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் நியூசிலாந்து 104 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தங்கள் மதிப்பீட்டில் 10 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா ஆறாவது மற்றும் வங்கதேசம் ஏழாவது இடத்தைப் பிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் பெரிய அளவில் முன்னேறி எட்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இலங்கை ஒன்பதாவது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் பத்தாவது இடத்திலும் உள்ளன.