
ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரே பரிசுத்தொகை : ஐசிசி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
உலகக்கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இனி சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் ஐசிசி வருடாந்திர மாநாட்டின் போது வியாழக்கிழமை (ஜூலை 13) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, "கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் மற்றும் ஐசிசி உலகளாவிய நிகழ்வுகளில் போட்டியிடும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு இப்போது சமமாக வெகுமதி அளிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
bcci behind this historic decision
ஐசிசி அறிவிப்பின் பின்னணியில் பிசிசிஐ
கடந்த 2022இல் ஆடவர் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு, இந்தியாவுக்காக பங்கேற்கும் போட்டிகளில் சம ஊதியம் வழங்கும் திட்டத்தை பிசிசிஐ அறிவித்தது.
இதன் பின்னணியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா, அங்கும் இதே திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து ஐசிசியின் பல்வேறு குழு கூட்டங்களிலும் நடந்த விவாதங்களுக்கு பிறகு, தற்போது போட்டி பரிசுத் தொகையை சம அளவில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் தற்போதைய அறிவிப்பை வரவேற்றுள்ள ஜெய் ஷா, "ஒரு புதிய விடியலின் தொடக்கம். சமத்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் சகாப்தம்." என ட்வீட் செய்துள்ளார்.