உலக கோப்பையை வென்ற பிறகும் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏமாற்றமளித்தது: மௌனம் கலைத்த சூர்யகுமார் யாதவ்
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த பின்னரும், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டது குறித்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் மும்பை அணிக்காகக் களமிறங்கி 21 பந்துகளில் 60 ரன்கள் விளாசி அபார வெற்றி தேடித்தந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணியிலிருந்து நீக்கப்பட்டது தனக்குக் கடும் ஏமாற்றத்தை அளித்ததாகவும், இருப்பினும் பழைய பசியுடன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடத் தேர்வுக் குழுவின் கதவைத் தட்டுவேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை சாதனை
தேர்வு குழுவின் அதிர்ச்சி முடிவு
அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, 2026 டி20 உலககோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவை அதிரடியாக நீக்கிவிட்டு, 2023 டிசம்பருக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயரைப் புதிய கேப்டனாக நியமித்தது.
உலககோப்பை வெற்றிக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சூர்யகுமாருக்கு இது பேரிடியாக அமைந்தது.
இதுகுறித்துப் பேசிய அவர், "சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற பிறகு அடுத்த தொடரில் விளையாடுவோம் என இயல்பாகவே எதிர்பார்ப்போம். ஆனால் தேர்வுக் குழு வேறு ஏதோ திட்டமிட்டுள்ளது.
நிச்சயமாக எனக்கு அது ஏமாற்றமாக இருந்தது; அந்த வருத்தம் இருந்தால்தான் அதை வெறியாக மாற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.
கம்பேக்
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடி மற்றும் கம்பேக் சபதம்
தனது கம்பேக் திட்டம் குறித்துத் தொடர்ந்து பேசிய சூர்யகுமார், "இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற அதே பசி இப்போது திரும்பிவிட்டது.
அதற்காகத் தேர்வுக் குழுவின் கதவைத் தட்டுவேன். எனது இலக்கு தெளிவாக உள்ளது. மனரீதியாகவும் திறன் ரீதியாகவும் என்னைப் பலப்படுத்தி ஒழுக்கமான பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன்" என்றார்.
முன்னதாக ஹைதராபாத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் 173 ரன்கள் இலக்கைத் துரத்திய மும்பை அணிக்காகக் கேப்டனாகக் களமிறங்கிய சூர்யகுமார், வெறும் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து 13.1 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெறச் செய்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.