அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புதிய வரலாறு படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20யில் ஜஸ்ப்ரீத் பும்ரா டாஸ் போடும்போது, டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த பும்ரா, இப்போது டப்ளினில் டி20 கேப்டனாக அறிமுகமாகிறார். இந்தியாவின் வழக்கமான டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை காரணமாக தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தலைமைப் பொறுப்பு மீண்டும் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவை டி20 கிரிக்கெட்டில் வழிநடத்தும் 11வது கேப்டன் ஆக உள்ளார்.
இந்திய அணியை டி20 கிரிக்கெட்டில் வழிநடத்திய வீரர்கள்
டி20 கிரிக்கெட் அறிமுகமானதிலிருந்து, ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு முன்னதாக 10 பேர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர். 2006இல் இந்திய அணியை முதன் முதலில் டி20 போட்டியில் வழிநடத்திய பெருமைக்குரியவராக வீரேந்திர சேவாக் உள்ளார். அவரைத் தொடர்ந்து எம்எஸ் தோனி இந்தியாவை வழிநடத்தினார். தோனி இல்லாத சமயத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் அஜிங்க்யா ரஹானே சில போட்டிகளில் அணியை வழிநடத்தினர். பின்னர், விராட் கோலி 2017 இல் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு, கோலியும் அதன்பிறகு, ரோஹித் ஷர்மாவும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். இடையில் தவான், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சில போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார்.