மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த ஹென்ரிச் கிளாசென்
செவ்வாய் (ஜூலை 25) இரவு மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மேஜர் லீக் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்தார். சியாட்டில் ஓர்காஸ் அணிக்காக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக, இதில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்தார். மேலும் கேப்டன் கீரன் பொல்லார்ட் 34 ரன்களை குவித்ததோடு, 110 மீட்டருக்கு சிக்ஸரை பறக்கவிட்டு அதிரடித்தார். சியாட்டில் ஓர்காஸ் தரப்பில் ஹர்மீத் சிங் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் 2023 சீசனிலும் சதமடித்த ஹென்ரிச் கிளாசென்
195 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய சியாட்டில் ஓர்காஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நவுமன் அன்வர் 51 ரன்கள் எடுத்த நிலையில், ஹென்ரிச் கிளாசென் கடைசி வரை அவுட்டாகாமல் 110 ரன்கள் எடுத்தார். மேலும் சியாட்டில் ஓர்காஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேஜர் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஹென்ரிச் கிளாசென், இந்த சீசனில் 231 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னதாக, ஐபிஎல் 2023 தொடரிலும் சிறப்பாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சதமடித்து, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.