
இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்
செய்தி முன்னோட்டம்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரி புரூக்கை நியமித்துள்ளது.
இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க தலைமை மாற்றமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்காலிகமாக இங்கிலாந்துக்கு கேப்டனாக இருந்த 26 வயதான ஹாரி புரூக், இப்போது ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு வடிவங்களிலும் அணியை நிரந்தரமாக வழிநடத்துவார்.
கேப்டன்சி
ஹாரி புரூக் கேப்டன்சி செயல்திறன்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் தலைமை தாங்கவில்லை என்றாலும், ஹாரி புரூக் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார்.
அந்த 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன.
இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக 26 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி புரூக் 810 ரன்களும், 44 டி20 போட்டிகளில் 798 ரன்களும் எடுத்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் அணியில் இடம் பெற்றிருந்த ஹாரி புரூக், இப்போது 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு அணியை வழிநடத்தும் பணியில் ஏற்க உள்ளார்.