ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.
காயத்திற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஜனவரியில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் 2024 தொடர்களில் அவர் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
2024 ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால், ஹர்திக் பாண்டியாதான் அணியை வழிநடத்துவார் எனும் நிலையில், இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
Mumbai Indians in trouble due to Hardik Pandya injury
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிக்கல்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னர் குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறினார்.
மேலும், ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் அவர் பங்கேற்பது சாத்தியமில்லை என வெளியாகியுள்ள தகவல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவை மீண்டும் கொண்டு வருமா அல்லது சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே, ஜனவரியில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.