ஐபிஎல் 2024: தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை கண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு, அதாவது 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று இரவு மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்ய, பேட் செய்த மும்பை அணி முதல் 4 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸ் இறுதியில், MI அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
ரோஹித்..ரோஹித்.. என முழக்கமிட்ட ரசிகர்கள்
போட்டி நடைபெற்ற வாங்கடே மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை 'ரோஹித்...ரோஹித்...' என பார்வையாளர்கள் முழக்கமிட்டும், மும்பையின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை நோக்கி 'பூ.....' என கத்தியும், பாண்டியவை வதைத்து கொண்டே இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை மாற்றியதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து ஹர்திக் பாண்டியா மீது ரோஹித் சர்மா ரசிகர்கள், அபிமானிகள், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் கடுப்பில் இருக்கின்றனர். இதனால், ஹர்திக் பாண்டியா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ரசிகர்கள் இது போல ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.