
"வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா
செய்தி முன்னோட்டம்
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தன்னை கேப்டனாக மாற்றியது குறித்து பேசினார்.
அப்போது, தனது முன்னோடி ரோஹித் ஷர்மா, ஐபிஎல்லின் போது தனக்கு வழிகாட்டும் சக்தியாக இருப்பார் என்று கூறினார்.
கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய பாண்டியா, 2024ஆம் ஆண்டுக்கான கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை பெற்றுத்தந்தவர் ரோஹித்.
அவருக்கு பதிலாக பாண்டியா அணியை வழிநடத்துவார் என அறிவிப்பு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
ரோஹித் ஷர்மா
"அவர் சாதனையை நான் முன்னெடுத்து செல்ல வேண்டும்"
மேலும்,"அது வித்தியாசமாக இருக்காது. அவர் எனக்கு உதவ எப்போதும் இருப்பார். அவர் இந்திய அணியின் கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், இது எனக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த அணி, இதுவரை சாதித்தது அனைத்துமே அவருக்கு கீழ் சாதித்தது தான்... இனிமேல் என்னுடைய பணி, அவர் சாதித்ததை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்று பாண்டியா கூறினார்.
"இது சங்கோஜமாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால், நாங்கள் 10 ஆண்டுகளாக சேர்ந்து விளையாடி வருவதால் இது ஒரு நல்ல உணர்வாக இருக்கும். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவருக்கு கீழ் விளையாடியிருக்கிறேன். தற்போது அவர் என் தோளில் கை வைத்து, என்னை வழிநடத்துவார்" என்று அவர் மேலும் கூறினார்.