ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மன்னிப்பு கோரினார்; உலகக்கோப்பை சர்ச்சைக்கு விடை கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி
செய்தி முன்னோட்டம்
சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, உலகக்கோப்பை விற்பனைத் திட்டம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய தலையீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக ஃபிஃபா கவுன்சில் கூட்டத்தில் முறைப்படி மன்னிப்புக் கோரினார். இருப்பினும், ஐரோப்பியக் கால்பந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எழுப்பிய முக்கியக் கேள்விகளுக்குத் தெளிவான ஆவணங்களையோ விளக்கங்களையோ வழங்க அவர் மறுத்தது கால்பந்து உலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
டொனால்ட் டிரம்ப்
$4.2 பில்லியன் திட்டம் மற்றும் டொனால்ட் டிரம்ப் விவகாரம்
உலகக்கோப்பையின் வர்த்தக உரிமைகளை விற்பனை செய்யும் $4.2 பில்லியன் ஃபிஃபா பார்வார்டு எண்டர்பிரைஸ் திட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள கால்பந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
மேலும், உலகக்கோப்பைப் போட்டியின் போது அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு அளிக்கப்பட்ட ரெட் கார்டை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டிற்குப் பிறகு இன்ஃபான்டினோ ரத்து செய்தது பெரும் சர்ச்சையானது.
இச்சம்பவங்கள் குறித்து ஐரோப்பியப் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.
தலைவர் தேர்தல்
ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தலைவர் தேர்தல் சவால்
இன்ஃபான்டினோவின் போக்கால் ஐரோப்பியப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஜெர்மன் கால்பந்து தலைவர் பெர்ன்ட் நியூன்டோர்ஃப் பேசுகையில், "எந்தக் கேள்விக்கும் திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை" என்றார்.
வரும் நவம்பர் 18-க்குள் ஃபிஃபா தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து கால்பந்து சங்கத் தலைவரும் ஃபிஃபா துணைத் தலைவருமான டெபி ஹெவிட், "கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறினால் இன்ஃபான்டினோ ஃபீஃபா தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர்" எனக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரகசியம்
ரகசியத்தன்மையைக் காரணம் காட்டும் ஃபிஃபா நிர்வாகம்
கூட்டத்திற்குப் பிறகு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட ஜியானி இன்ஃபான்டினோ, உலகக்கோப்பைத் திட்ட விவகாரத்தில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஆலோசனைகளில் ஏற்பட்ட தவறுகளுக்காகத் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அது வெறும் முன்மொழிவு மட்டுமே தவிர ஒப்பந்தம் அல்ல என்றும் விளக்கமளித்தார்.
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சட்டப்பூர்வ ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு கூடுதல் விபரங்களை உடனடியாக வெளியிட முடியாது என ஃபிஃபா நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.