ஹான்சி குரோனியே சூதாட்டத்தை விட பெரிய மோசடி; ஸ்மித், வார்னருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்க வேண்டும்: ஜெஃப்ரி பாய்காட் ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய சாண்ட்பேப்பர் கேட் (Sandpaper Gate) விவகாரம், 25 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை உலுக்கிய ஹான்சி குரோனியேவின் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தை விட மிகப்பெரிய மோசடி என இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாகச் சாடியுள்ளார். 'தி டெலிகிராப்' நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஹான்சி குரோனியே விவகாரத்தில் ஓரிரு இளம் வீரர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகவும், மற்ற வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அது தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆனால், ஆஸ்திரேலிய விவகாரத்தில் ஒரு ஒட்டுமொத்த அணியே சேர்ந்து திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது கிரிக்கெட் வரலாற்றில் தான் பார்த்திராத மிக மோசமான செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
ஸ்மித், வார்னர் தப்பித்துவிட்டனர்
5 ஆண்டுகள் தடை விதித்திருக்க வேண்டும்
அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்குத் தலா ஓராண்டும், பந்தை உப்புத்தாளால் தேய்த்த கேமரூன் பான்கிராஃப்டிற்கு 9 மாதங்களும் மட்டுமே தடை விதிக்கப்பட்டு 2019-லேயே மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டதைப் பாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நடந்த தற்செயல் நிகழ்வு அல்ல. வெற்றி பெறுவதற்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதால் ஒரு இளம் வீரரை வைத்து இந்த மோசடியைச் செய்துள்ளனர்.
ஸ்மித் மற்றும் வார்னர் மிக எளிதாகத் தப்பித்துவிட்டனர். வர்களுக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் தடை விதித்திருக்க வேண்டும்" எனப் பாய்காட் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கம்மின்ஸ், ஹேசில்வுட் மறுப்பு
உஸ்மான் கவாஜா புத்தகத்தால் வெடித்த புயல்
முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில், "பந்தைச் சேதப்படுத்தியது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் தெரியும்" எனக் குறிப்பிட்டிருந்ததை டேவிட் வார்னர், சாட் சேயர்ஸ் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோரும் ஆமோதித்ததால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது.
ஆனால், தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மேலும், கம்மின்ஸ் மீது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்தால் ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க நேரிடும் என ஹேசில்வுட் எச்சரித்துள்ளார்.