கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பிர் வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) துணை ஊழியர்களுடன் திட்ட ஆலோசகராக சேர்ந்துள்ளார். எம்எஸ்கே பிரசாத்தின் நியமனம் அணியின் ஒரு பெரிய மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு அங்கமாக உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் ஜஸ்டின் லாங்கர் ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், எல்எஸ்ஜியிலிருந்து வெளியேறும் அடுத்த நபராக கவுதம் காம்பிர் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பும் கவுதம் காம்பிர்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகும் கவுதம் காம்பிரின் அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவார் எனக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக முக்கியப் பங்காற்றிய பின்னர், 2011 ஏலத்தில் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்ந்தார். பிறகு, 2013 மற்றும் 2014இல் அந்த அணி பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். காம்பிர் தற்போது அமெரிக்காவில் யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள நிலையில், அங்கிருந்து நாடு திரும்பியவுடன் லக்னோ அணியிலிருந்து அவர் விலகும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.