கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி என்பதால், ரசிகர்கள் மிக அதிக எண்ணிக்கையில் ஸ்டேடியத்திற்கு வருவார்கள் என்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. போட்டி நடக்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, சுமார் 2,000 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி பகலிரவு ஆட்டமாக நடப்பதால், ரசிகர்களின் போக்குவரத்துக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல வசதிகளை செய்துள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்
ஒருநாள் உலகக்கோப்பைக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்கான டிக்கெட்டை காட்டி ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது போட்டி முடிந்த பிறகு, ஓமந்தூரரர் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், போட்டியை காண செல்லும்போது இந்த சலுகை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வேயும் அறிவித்துள்ளது.