36 வயதில் முன்னாள் WWE சாம்பியன் பிரே வியாட் மாரடைப்பால் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
முன்னாள் WWE சாம்பியனான தொழில்முறை மல்யுத்த வீரர் பிரே வியாட் தனது 36 வயதில் மாரடைப்பால் காலமானார். WWE நிறுவனத்தின் தலைமை கன்டென்ட் அதிகாரி பால் டிரிபிள் எச் லெவெஸ்க் இதை உறுதிப்படுத்தியுள்ளார். விண்ட்ஹாம் ரோட்டுண்டா என்ற இயற்பெயர் கொண்ட பிரே வியாட், கடந்த பிப்ரவரியில் WWE நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான காரணம் பொதுவெளியில் கூறப்படவில்லை என்றாலும், உயிர்க்கொல்லி நோயால் அவதிப்படும் அவர் சிகிச்சை பெறவே விலக்கி வைக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. மேலும், அதன் பிறகு பிரே வியாட்டும் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது அவர் காலமான செய்தி வெளியாகியுள்ளது. இது WWE ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரே வியாட்டின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
WWE'இல் பிரே வியாட்டின் வளர்ச்சி
பிரே வியாட் என்ற பெயரில் இயங்கி வந்த விண்ட்ஹாம் ரோட்டுண்டா 2009இல் WWE நிறுவனத்தில் தொழில்முறை மல்யுத்த வீரராக பணியில் சேர்ந்தார். 2010 இல் 'ஹஸ்கி ஹாரிஸ்' என்ற வளையப் பெயரின் கீழ் 'தி நெக்சஸ்'இல் அவர் இடம் பெற்றார். எனினும், லூக் ஹார்பர் மற்றும் எரிக் ரோவன் ஆகியோருடன் தி வியாட் குடும்பத்தை அறிமுகம் செய்ததன் மூலம், 2014 ஆம் ஆண்டு அவரது வளர்ச்சி வேகமெடுக்கத் தொடங்கியது. ரோட்டுண்டா இரண்டு முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் மற்றும் ராண்டி ஆர்டன், ஜான் செனா மற்றும் தி அண்டர்டேக்கர் போன்றவர்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க ரெஸில்மேனியா போட்டிகளைக் கொண்டிருந்தார்.