வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோ சாலமன் காலமானார்; இவரது பின்னணி என்ன?
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் ஜோ சாலமன் தனது 93வது வயதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலமானார். இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மேலும் சோகமான செய்தி. முன்னாள் கயானா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனான ஜோ சாலமன் இன்று காலமானார். 1960ல் புகழ்பெற்ற டை ஆன டெஸ்டில் ரன் அவுட் செய்ததால் பிரபலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று இரங்கல் தெரிவித்துள்ளது. அவர் 1958 மற்றும் 1965க்கு இடையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 என்ற சராசரியுடன் 1,326 ரன்கள் எடுத்தார்.
ஜோ சாலமனின் முக்கியத்துவம்
1960இல் ஆஸ்திரேலியாவின் காபாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் செய்த பங்கிற்காக அவர் மிகவும் நினைவுகூரப்படுவார். ஆஸ்திரேலியா அந்த போட்டியில் இறுதி எட்டு பந்தில் வெற்றி பெற 6 ரன்கள் இருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகள் மீதமிருந்ததால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிச்சி பெனாட் மற்றும் வாலி க்ரூட் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் கடைசி பேட்டரான லிண்ட்சே க்லைன், ஒரு சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால் சாலமன் ரன் அவுட் செய்தார். இதன் விளைவாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் டையான முதல் போட்டி என்ற சாதனையை இந்த போட்டி படைத்தது.