மாநில முதல்வரின் உதவியாளர் எனக் கூறி பணமோசடி : சிக்கிய முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்
ஆந்திரப் பிரதேசத்தில் ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாகராஜு புடுமுறு என்பவர் சிட்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உதவியாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து 60 நிறுவனங்களிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புடுமுறு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், சிட்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஊழியரை தொடர்பு கொண்ட புடுமுறு, தன்னை முதல்வரின் உதவியாளராகக் காட்டிக்கொண்டு, மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிக்கி புய்க்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்யுமாறு கேட்டார். மேலும் நிறுவனத்தை நம்பவைக்க தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் தனது அடையாளம் மற்றும் தொடர்புக்கான ஆதாரமாக போலி ஆவணங்களை அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தார்.
மோசடி கிரிக்கெட் வீரர் சிக்கியது எப்படி?
புடுமுறுவின் ஆவணங்களை பார்த்து நம்பிய சிட்டி எலக்ட்ரானிக்ஸ் ரூ.12 லட்சத்தை அவருக்கு மாற்றிய நிலையில், கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார், பணம் கடைசியில் புடுமுறுவுக்கு சென்றதை காட்டியது. இதையடுத்து இந்த வார தொடக்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள யாவரிபெட்டா என்ற அவரது சொந்த ஊரில் வைத்து புடுமுறு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து 7.6 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். 2018ல் தனது செயல்திறனை இழந்து அணியிலிருந்து நீக்கப்பட்டதால், தனது ஆடம்பர வாழ்க்கை முறையை தொடர, இதுபோல் மோசடிகளை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.