LOADING...
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: கால்பந்து ஆட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கும் 'ஆப்சைட்' விதியை மாற்றப்போகும் ஏஐ தொழில்நுட்பம்
கால்பந்து ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏஐ தொழில்நுட்பம்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: கால்பந்து ஆட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கும் 'ஆப்சைட்' விதியை மாற்றப்போகும் ஏஐ தொழில்நுட்பம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 24, 2026
03:47 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கு முன்னதாக, லெனோவா மற்றும் ஃபிஃபா இணைந்து கால்பந்து ரசிகர்களின் நீண்டகாலப் புகாரான 'ஆப்சைட்' (offside) முடிவுகளைத் துல்லியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. தற்போதுள்ள VAR முறையில் காட்டப்படும் சிதைந்த அனிமேஷன்களுக்குப் பதிலாக, வீரர்களின் தத்ரூபமான 3டி டிஜிட்டல் உருவங்களை (Digital Twin) உருவாக்குவதன் மூலம், முடிவுகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை நீக்க இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

டிஜிட்டல் ட்வின்

தத்ரூபமான 3டி உருவங்கள்

தற்போதைய VAR முறையில் காட்டப்படும் அனிமேஷன்கள் வீடியோ கேம் போன்ற தோற்றத்தில் இருப்பதால், ரசிகர்கள் முடிவுகளை நம்பத் தயங்குகின்றனர். இதை மாற்ற, லெனோவா நிறுவனம் ஒவ்வொரு கால்பந்து வீரரின் உடல் அமைப்பு, முகம் மற்றும் தலைமுடி உட்பட அனைத்தையும் தத்ரூபமாக ஸ்கேன் செய்து 'டிஜிட்டல் ட்வின்' உருவாக்குகிறது. 3டி காஸியன் ஸ்பிளாட்டிங் (3D Gaussian Splatting) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, துகள்களாக மாற்றப்பட்டு துல்லியமான 3டி உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. இது முடிவுகளை நிஜமாக உணர்த்தும்.

செயல்பாடு

இது எப்படிச் செயல்படுகிறது?

1,200க்கும் மேற்பட்ட வீரர்களை ஸ்கேன் செய்ய 28 சிறப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 36 கேமராக்கள் கொண்ட இந்த அறையில் சில மில்லிசெகண்டுகளில் ஸ்கேனிங் நடக்கும். பின்னர் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் ஏஐ தொழில்நுட்பம் அவற்றை உருவங்களாக மாற்றும். ஜெர்சி எண் அல்லது கிட் மாற்றப்பட்டாலும், ஏஐயின் செக்மென்டேஷன் (segmentation) வசதி மூலம் அந்த உடைகளைத் தனித்தனியே மாற்றி, முழு உருவத்தையும் மீண்டும் உருவாக்கத் தேவையின்றி மாற்றங்களைச் செய்ய முடியும். இது நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது.

Advertisement

மாற்று கிடையாது

VAR முறைக்கு மாற்றல்ல, இது ஒரு மேம்பாடு

முக்கியமாக, ஏற்கனவே உள்ள 'செமி-ஆட்டோமேட்டட் ஆஃப்சைடு டெக்னாலஜி' (SAOT) முறை மாற்றப்படவில்லை. லெனோவாவின் இந்த தொழில்நுட்பம், ஏற்கனவே இருக்கும் ஸ்கெலட்டன் தரவுகளின் மீது ஒரு புதிய லேயராகச் செயல்படுகிறது. அதாவது, முடிவெடுக்கும் வேகம் மற்றும் துல்லியம் மாறாமல், காட்டப்படும் காட்சி மட்டுமே தத்ரூபமாக மாற்றப்படுகிறது. எனவே, இது முடிவுகளை மாற்றாது, மாறாக ரசிகர்களுக்கு அந்த முடிவுகளின் மீது நம்பகத்தன்மையை வழங்கும் ஒரு சிறந்த மேம்பாடாகவே அமையும்.

Advertisement

தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி

ஃபிஃபா உலகக்கோப்பை ஒரு களமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் கேமிங், விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), திரைப்படங்கள் மற்றும் மருத்துவத் துறை வரை மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். மனித உருவங்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும் என்பது எதிர்காலத் தொழில்நுட்ப உலகில் ஒரு மைல்கல்லாகும். இந்த தொழில்நுட்பம் மூலம், 2026 உலகக்கோப்பையில், ரசிகர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆஃப்-சைடு ரிப்ளேயும் நிஜத்தைப் போலவே தத்ரூபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement