இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 325 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. பெரும்பாலான இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இன்டீஸின் பேட்டர்களை தடுத்து நிறுத்த போராடினாலும், அது எதுவும் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கரண் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார். யார்க்கர்களை சிறப்பாக வீசும் திறன் மற்றும் நெருக்கடியான ஓவர்களில் மெதுவாக பந்து வீசும் திறன் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற சாம் கரணின் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து நொறுக்கியதை அந்த அணி வீரர்களே எதிர்பார்க்கவில்லை.
ஸ்டீவ் ஹார்மிசன் மற்றும் கிறிஸ் ஜோர்டானை பின்னுக்குத் தள்ளிய சாம் கரண்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9.5 ஓவர்கள் பந்துவீசி 10 என்ற அதிகபட்ச எகானமியுடன் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 98 ரன்களை விட்டுக் கொடுத்தார். முன்னதாக, இங்கிலாந்து அணியில் ஸ்டீவ் ஹார்மிசன் (0/97 எதிராக இலங்கை) மற்றும் கிறிஸ் ஜோர்டான் (1/97 எதிராக நியூசிலாந்து) ஆகியோர் இந்த மோசமான சாதனையை தங்கள் வசம் வைத்திருந்த நிலையில், அதை தற்போது சாம் கரண் முறியடித்துள்ளார்.