ஆஷஸ் 2023 : போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூன் 28) தொடங்க உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக விளையாடும் லெவன் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் மொயீன் அலி காயம் காரணமாக நீக்கப்பட்டதால், 25 வயதான ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஜோஸ் டங்குவிற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். முன்னதாக, முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 0-1 என பின்தங்கியுள்ளது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து விளையாடும் லெவன் பட்டியல்
முதல் டெஸ்டில் களமிறங்கிய வீரர்களில் எந்த மாற்றமும் செய்யாமல், காயமடைந்த மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்குவை மட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சேர்த்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முழுமையான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கவுள்ளது. இங்கிலாந்துக்கு தற்போது பேட்டர் ஜோ ரூட் மட்டுமே பகுதி நேர சுழற்பந்து ஆப்ஷனாக உள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அணி : பென் டக்கெட், சாக் க்ராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங்கு, ஜேம்ஸ் ஆண்டர்சன்.