ஒருநாள் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அரைசதம் அடித்ததோடு, விராட் கோலிமற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றுள்ளன.
முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் ஹாரி புரூக் முறையே 110 (நாட் அவுட்) மற்றும் 87 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், தற்போது ஐந்தாவது போட்டியில் 72 ரன்கள் எடுத்தார்.
சாதனை
சாதனையை முறியடித்த ஹாரி புரூக்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹாரி புரூக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த இளம் இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனை படைத்தார்.
இந்நிலையில், தற்போது ஐந்தாவது போட்டியில் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, இந்த பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி 310 ரன்களுடன் முதலிடத்திலும், எம்எஸ் தோனி 285 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
ஹாரி புரூக் தனது 72 ரன்கள் மூலம், இந்த இருவரையும் பின்னுக்குத் தள்ளி 312 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.