டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 ஆண்டு கால வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்
முல்தானில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டர் ஹாரி புரூக் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதத்தைப் பதிவு செய்யும் ஆறாவது இங்கிலாந்து பேட்டர் மற்றும் அவரது நாட்டிற்காக 1990க்குப் பிறகு முச்சதம் அடித்த முதல் வீரரும் ஆனார். முன்னதாக, இந்த மைதானத்தில் 2004இல் நடந்த போட்டியில் சேவாக் 375 பந்துகளில் 309 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், அவரது 20 ஆண்டுகால சாதனையை முறியடித்து, 310 பந்துகளில் 300 ரன்களை எட்டி, முல்தானில் குறைந்த பந்துகளில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் முச்சதம் அடித்த டாப் 5 வீரர்கள்
முல்தான் மைதானத்தின் வீரேந்திர சேவாக்கின் சாதனையை ஹாரி புரூக் முறியடித்தாலும், ஒட்டுமொத்தமாக டெஸ்டில் குறைந்த பந்துகளில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வீரேந்திர சேவாக் தக்கவைத்துள்ளார். 2008இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் 278 பந்துகளில் வீரேந்திர சேவாக் முச்சதம் எட்டியதே ஒரு வீரர் குறைந்த பந்துகளில் முச்சதம் அடித்த சாதனையாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஹாரி புரூக்கின் தற்போதைய முச்சதம் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், மூன்றாவது இடத்தில், 1933இல் இங்கிலாந்தின் வாலி ஹாமண்ட் 355 பந்துகளில் முச்சதம் அடித்து உள்ளார். நான்காவது இடத்தில், 2003இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூவ் சைமண்ட்ஸ் 362 பந்துகளிலும், ஐந்தாவது இடத்தில் வீரேந்திர சேவாக் முல்தானில் 2004இல் 364இல் எடுத்த ஸ்கோரும் உள்ளன.