
ஜோகோவிச் vs அல்கராஸ்: விம்பிள்டன் இறுதிப்போட்டியில் வெல்லப் போவது யார்?
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. செர்பிய டென்னிஸ் சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சும், ஸ்பானிஷ் இளம் வீரர் கார்லோஸ் அல்கலராஸூம் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்கள்.
நேற்று சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒன்ஸ் ஜெப்யூரை, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் ஜெக் வீராங்கனை மார்கெட்டா வான்ட்ரோசோவா.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. மேலும், இன்று மோதவிருக்கும் இரு வீரர்களுக்குமிடையே இருக்கும் 16 வயது வித்தியாசமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.
டென்னிஸ்
வெற்றி வாகை சூடப்போவது யார்?
இன்றைய போட்டி நடைபெறவிருக்கும் சென்டர் கோர்ட்டில் தான் கடைசியாக ஆடிய 45 போட்டிகளிலும் வெற்றியையே ருசித்திருக்கிறார் ஜோகோவிச். 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்ற நான்கு விம்பிள்டன் தொடர்களிலும் ஜோகோவிச்சே சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
இத்துடன் கடந்தாண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடர் முதல் கடைசியாக நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் வரை தான் கலந்து கொண்ட மூன்று கிராண்டு ஸ்லாம் தொடர்களிலும் வெற்றி வாகை சூடியிருக்கிறார் ஜோகோவிச்.
இப்படி கடந்த சில காலமாக விம்பிள்டனிலும், கிராண்டு ஸ்லாம்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு சாம்பினையே இன்றைய இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவிருக்கிறார் 20 வயதேயான அல்கராஸ்.
இதற்கு முன்னர் இவர்களிருவரும் மோதிய இரு போட்டிகளில் ஆளுக்கொன்றை வென்று சமநிலையில் இருக்கின்றனர்.