உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களில் ஜாம்பவானாக இருக்கும் இந்தியா! கடந்த கால புள்ளி விபரங்கள்!
வியாழக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதல் போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளது. முக்கியமான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக, உள்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இருக்கும் நிலையை இந்திய அணி தக்க வைக்க வேண்டும். சுவாரஸ்யமாக, இந்தியா கடைசியாக 2012/13 சீசனில் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. 2012 டிசம்பரில், இந்தியாவில் டெஸ்ட் தொடரை (1-2) இங்கிலாந்திடம் இழந்தது. அதன் பிறகு இங்கு நடந்த 15 டெஸ்ட் தொடரில் இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த இந்தியா
2012 தோல்விக்கு பிறகு இந்தியா 42 உள்நாட்டு டெஸ்டில் 34ஐ வென்றனர். இரண்டில் மட்டுமே தோல்வியடைந்தனர். அதில் ஆறு டிரா செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்தியா இரண்டு முறை சொந்த மண்ணில் வென்றது. தோனி தலைமையில் 2013 தொடரில் ஆஸ்திரேலியாவை 4-0 என வீழ்த்தியது. 2017இல், புனேவில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தாலும், இந்தியா தொடரை வென்றது (2-1). சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா. 2013 மற்றும் 2022 க்கு இடையில் அவர்கள் தொடர்ந்து 15 உள்நாட்டு டெஸ்ட் தொடர்களை வென்றனர். குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலியா மட்டுமே அதிகபட்சமாக இதுபோன்ற 10 தொடர்களை (1994-2000 மற்றும் 2004-08) வென்றுள்ளது.