தொடர்ந்து மோசமான ஆட்டம்! கே.எல்.ராகுலை இந்திய அணியிலிருந்து கழட்டி விட திட்டம்!
டெல்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 17 மற்றும் 1 என்ற அளவில் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும், நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டிலும் அவர் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ரெட் பால் கிரிக்கெட்டில் அரைசதம் கூட அடிக்காமல், ராகுல் தற்போது 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளங்கினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது செயல்திறன் சீரற்றதாக உள்ளது. ஷுப்மான் கில் போன்ற இளம் பேட்டர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், ராகுல் ஆட்டத்தை மீட்டெடுக்காவிட்டால், அணியில் இடத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் முந்தைய செயல்திறன்
ராகுல் கடைசியாக 2021 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார். அதில் அவர் 260 பந்துகளில் 123 ரன்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 23 ரன்கள் எடுத்தார். மேலும் ராகுல் தனது கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த சமயத்தில் அவர் மொத்தம் 198 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2022 இல் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் அவர் இந்தியாவின் கேப்டனாக இருந்தார். அதில் 2-0 என தொடரை கைப்பற்றினாலும், கே.எல்.ராகுலின் செயல்பாடு திருப்தி அடையும் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.