சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான 37 வயது டேவிட் வார்னர். தற்போது பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், வரும் ஜனவரி 3ம் தேதியன்று இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அவர்.
2025 சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பு?
தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினாலும், அடுத்த ஆண்டு (2025) நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் தேவைப்படும் பட்சத்தில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி, இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்பு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், தொடர்ந்து இன்னும் சில காலத்திற்கு ஐபிஎல் மற்றும் பிபிஎல் போன்ற பிரான்சைஸ் டி20 தொடர்களில் அவர் பங்கேற்பார் என்றே தெரிகிறது.