தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்!
எம்எஸ் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் வியத்தகு முறையில் மாறும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது முறையாக பிளேஆப் வாய்ப்பை எட்டியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 23) அன்று நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் டாம் மூடி, அணியில் தலைமையின் தாக்கம் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டதோடு, தோனிக்கு பிறகு வரும் கேப்டன் சில வித்தியாசமான மாற்றங்களை செய்யலாம் என்பதால் சென்னை வியத்தகு முறையில் மாறும் என்றும் கூறினார். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இந்த முறை ஐந்தாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
அஜிங்க்யா ரஹானே மற்றும் பியூஸ் சாவ்லாவை பாராட்டிய டாம் மூடி
தொடர்ந்து பேசிய டாம் மூடி, "பியூஸ் சாவ்லா அல்லது அஜிங்க்யா ரஹானே போன்றவர்கள் மும்பை இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு அணியில் வெற்றிகரமான வீரராக திகழ்வது எளிதானது. ஏனெனில் அவர்கள் திறமையை ஆதரிக்கிறார்கள் மற்றும் வீரர்கள் சில சமயங்களில் சரியாக செயல்படவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்பை வழங்குகிறார்கள். இது வீரர்கள் மற்றும் அணிக்கு இடையே பிணைப்பை அதிகரிப்பதோடு, வீரர்களை சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும்." என்று கூறினார். பியூஸ் சாவ்லா இந்த சீசனில் 20 விக்கெட்டுகளை எடுத்தார். அதே நேரத்தில் ரஹானே 169.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 282 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.