சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கடந்த 15 சீசன்களில் சில பரபரப்பான என்றும் நினைவுகூரக்கூடிய போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த இரு அணிகளும் மோதுவது இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாகும். ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 19 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆர்சிபி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. விராட் கோலி (993 ரன்கள்) அதிக ரன் எடுத்தவராவும், ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்டுகள்) அதிக விக்கெட் எடுத்தவராகவும் உள்ளனர்.
ஐபிஎல் 2022இல் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் 2022இல் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்த நிலையில், ஆர்சிபி 2016க்கு பிறகு மூன்றாவது இடத்தில் முடித்துள்ளது. இரு அணிகளும் 2022இல் கடைசியாக நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையேயான சில சுவாரஷ்யமான போட்டிகளை பற்றி பேசுகையில், 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டியில் ஆர்சிபி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே இரண்டாவது இன்னிங்சில் 74/4 என போராடிய நிலையில், தோனி அபார அரைசதம் அடித்து ஆர்சிபியை வீழ்த்தினார். ஒருவருடம் கழித்து அதே மைதானத்தில், ஆர்சிபிக்கு எதிராக 162 ரன்களை சேஸ் செய்த சிஎஸ்கே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.