இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்?
2023 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்து, இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் 2023ல் பயங்கர ஃபார்மில் உள்ளார். மேலும் அவர், ஐபிஎல் 2023 தொடரிலும் தனது அபாரமான பேட்டிங் திறனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிகளை வாரிக் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் இதுவரை 16 இன்னிங்ஸ்களில் 60.79 என்ற சராசரியிலும், 156.43 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் மூன்று சதங்களுடன் 851 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தக்கவைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்த ஒட்டுமொத்த ரன்களில் 30% ஷுப்மன் கில் அடித்ததாகும். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது ஸ்கோரை மேலும் அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மன் கில்
டி20 வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷுப்மன் கில், இந்த ஆண்டில் இதுவரை 22 இன்னிங்ஸ்களில் 1,053 ரன்கள் குவித்துள்ளார். இது 2023ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரரின் மூன்றாவது அதிக ரன்களாகும். இந்த பட்டியலில் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ரிஸ்வான் 26 இன்னிங்ஸ்களில் 1,063ரன்களை அடித்து கில்லை விட 10 ரன்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளார். மறுபுறம், டு பிளெஸ்ஸிஸ் 26 இன்னிங்ஸ்களில் 1,139 ரன்கள் எடுத்து, கில்லை விட 87 ரன்கள் முன்னிலையில் உள்ளார். இந்த போட்டியில் இரு வீரர்களையும் தாண்டி இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக கில் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.