ஐபிஎல் 2023 : சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியாக களமிறங்கும் டெவோன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் பேட்டிங் வரிசையை விவாதிக்கும்போது தொடக்க ஆட்டக்காரர்கள் எப்போதும் முதலிடத்தைப் பெறுவார்கள். இவர்கள் பவர்பிளேயை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை கொடுத்து வெற்றியை நோக்கி நகர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் 2023 சீசன் தொடங்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) தொடக்க ஜோடியாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ராபின் உத்தப்பா பெயர் அடிபட்டாலும், டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி தான் களமிறக்கப்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 2 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்களை வைத்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் கடந்த கால சூப்பர் டூப்பர் தொடக்க ஜோடிகள்
மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் : ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றான இவர்கள் இருவரும் இணைந்து சென்னை அணிக்காக 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பட்டத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர். பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவைன் ஸ்மித் : பந்துவீச்சாளர்களை பதறவைப்பதில் இந்த ஜோடியை மிஞ்ச ஆளில்லை. குறிப்பாக பவர் பிளேயின் போது, இந்த ஜோடி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. அவர்கள் தங்கள் அணிக்காக இரண்டு முறை 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸிஸ் : மேலே குறிப்பிட்டவர்கள் தவிர இந்த ஜோடியும் குறிப்பிடத்தக்க அளவில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளது.