Loading...
ரொனால்டோவின் பிரியாவிடை போட்டியில் போர்ச்சுகலுக்கு பேரிடி: சொந்த மண்ணில் 4-1 என டென்மார்க்கிடம் படுதோல்வி
ரொனால்டோவின் பிரியாவிடை போட்டியில் டென்மார்க்கிடம் போர்ச்சுகல் படுதோல்வி அடைந்துள்ளது.

ரொனால்டோவின் பிரியாவிடை போட்டியில் போர்ச்சுகலுக்கு பேரிடி: சொந்த மண்ணில் 4-1 என டென்மார்க்கிடம் படுதோல்வி

எழுதியவர் Vasuki
Nov 15, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிரியாவிடை அளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேஷன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில், டென்மார்க் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணில் போர்ச்சுகல் அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பிராகா நகரில் நேற்று (நவ. 14) இரவு நடைபெற்ற இப்போட்டியில், ரொனால்டோவின் 23 ஆண்டுகால அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் வீரர்கள் அவரது பெயர் மற்றும் 7-ஆம் எண் கொண்ட ஜெர்சியுடன் களமிறங்கியதுடன், ரசிகர்கள் 'நன்றி கேப்டன்' என்ற பிரம்மாண்ட பதாகைகளை ஏந்தி நெகிழ்ச்சி அஞ்சலி செலுத்தினர். ஆனால், கொண்டாட்ட இரவாக அமைய வேண்டிய இப்போட்டியைத் தனது அதிரடி ஆட்டத்தால் டென்மார்க் அணி போர்ச்சுகலுக்கு மறக்க முடியாத கசப்பான இரவாக மாற்றியுள்ளது.

 மோசமான சாதனை

போர்ச்சுகல் கோட்டையை தகர்த்த டென்மார்க்

நடப்பு நேஷன்ஸ் லீக் தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் வென்றிருந்த பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் தலைமையிலான போர்ச்சுகல் அணிக்கு, டென்மார்க் அதிர்ச்சி அளித்தது.

43-வது நிமிடத்தில் ஹோஜ்பெர்க் பெனால்டி கோலடிக்க, இடைவேளைக்குப் பிறகு 7 நிமிட இடைவெளியில் ஹோஜ்லண்ட் இரண்டு கோல்களை அடித்தார்.

75-வது நிமிடத்தில் ஆண்டர்சன் நான்காவது கோலடிக்க, கூடுதல் நேரத்தில் பெர்னார்டோ சில்வா போர்ச்சுகலுக்கு ஆறுதல் கோல் அடித்தார்.

2010-க்குப் பிறகு சொந்த மண்ணில் போர்ச்சுகல் 4 கோல்கள் விட்டுக்கொடுப்பது இதுவே முதல்முறை; மேலும், சொந்த மண்ணில் போர்ச்சுகல் சந்தித்த மிக மோசமான தோல்வியாகவும் இது பதிவாகியுள்ளது.

சர்ச்சை பேச்சு

ரொனால்டோவுக்குச் சிறப்பு கௌரவம் 

போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் 146 கோல்கள் அடித்து, யூரோ 2016 மற்றும் இரண்டு நேஷன்ஸ் லீக் கோப்பைகளை வென்று கொடுத்த ரொனால்டோ, பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாட்டால் நவம்பர் 5-ஆம் தேதி சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.

அவரது நினைவாக 7-ஆம் எண் வடிவமைப்பையே நிரந்தரமாக மாற்றிப் போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் கௌரவித்த நிலையில், போட்டிக்குப் பின் பேசிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ரொனால்டோவின் இடத்தை அணி இழந்ததா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எதை இழந்தோம்? அவர் இப்போது அணியில் இல்லை, பிறகு எதை இழக்கப் போகிறோம்? எனக்குத் துணையாக இருக்க அவர் இங்கு இல்லாதது மட்டுமே குறை" என ஜீசஸ் பதிலளித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT