யூடியூப் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 10 கோடி வியூஸ்; கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சம்பாதித்திருப்பார்?
போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சமூக ஊடக நெட்வொர்க்களை விரிவாக்கி, யூடியூபில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளார். அவரது புதிய யூடியூப் சேனலான 'UR - Cristiano' துவங்கிய முதல் நாளிலேயே பல சாதனைகளை முறியடித்துள்ளது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட ரொனால்டோ, யூடியூபில் இணைந்த 2 மணி நேரத்திற்குள் 10 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். ரொனால்டோ இதுவரை தனது சேனலில் 12 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவை கடந்த இரண்டு நாட்களுக்குள் நடந்தவையாகும். பொதுவாக யூடியூப் வீடியோக்களின் சராசரி நீளம் 10 நிமிடங்கள் என்றாலும், ரொனால்டோ ஒரு நிமிடம், இரண்டு நிமிட வீடியோக்களையே அதிகம் பதிவேற்றியுள்ளார்.
மூன்று வீடியோக்களுக்கு 2 கோடி பார்வைகள்
ரொனால்டோவின் செல்வாக்கு காரணமாக அவரது குறுகிய வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக அவர் வெளியிட்ட மூன்று வீடியோக்கள் 2 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளன. திங்க்கிபிக் நிறுவனத்தின் ஆய்வின்படி, யூடியூப் சேனல்கள் 1,000 பார்வைகளுக்கு சுமார் 6 அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இது 10 லட்சம் பார்வைகளுக்கு 1,200 முதல் 6,000 அமெரிக்க டாலர் வரை கொடுக்கும். ரொனால்டோவின் யூடியூப் சேனல் தற்போது 10 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளார். விளம்பர வருமானம் மற்றும் யூடியூப் வெற்றியின் விளைவாக வந்த பார்ட்னர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலம், ரொனால்டோ ஏற்கனவே ஒரு சில நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்து இருக்கக்கூடும்.