சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடெமியை திறந்தார் "யார்க்கர் புயல்" நடராஜன்
சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடங்கியுள்ள புதிய கிரிக்கெட் அகாடெமியை மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். சேலம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் இருந்து வந்த நடராஜன் தனது யார்க்கர் திறமையால் டிஎன்பிஎல், ஐபிஎல்லில் விளையாடி பின்னர் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். 2021 ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜனுக்கு, அதே தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன், காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது காயத்திலிருந்து மீண்டு, அணிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.
தோனிக்கு அடுத்து நடராஜன் தான் என கூறிய தினேஷ் கார்த்திக்
தன்னைப்போலவே குக்கிராமங்களில் இருந்து வரும் வீரர்களின் முன்னேற்றத்தாக தொடர்ந்து செயல்பட்டு வரும் நடராஜன், அவர்களுக்கு உதவும் வகையில் தனது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியிலேயே ஒரு மையத்தை தொடங்கி, அதை இன்று தினேஷ் கார்த்திக் மூலம் திறந்துள்ளார். இந்த மையத்தில் கிராமப்புற வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பேசிய தினேஷ் கார்த்திக், "நகரங்களில் இருந்து பலர் வந்தாலும், சிறிய ஊர்களில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் எம்எஸ் தோனிக்கு அடுத்து நடராஜன் தான் உள்ளார். நடராஜன் தான் பெற்றதை இந்த சமூகத்திற்கும் திருப்பி கொடுக்கவே இதை தொடங்கியுள்ளார்." எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.