ஐபிஎல் 2023 : சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக நியமித்த ஜியோ சினிமா
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023க்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக ஜியோ சினிமா நியமித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் டிஜிட்டல் உரிமைகளை கைப்பற்றியுள்ள ஜியோ சினிமா, ரசிகர்களை தனது தளத்தில் பார்க்கவைக்கும் வகையில் சச்சினை பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது. சச்சின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- ரசிகர்கள் எல்லா விளையாட்டுகளிலும் ஒரு அங்கம். ரசிகர்களை மையமாக வைத்து ஜியோ சினிமா குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வயாகாம் 18 குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். வயாகாம் 18 ஸ்போர்ட்ஸ் சிஇஓ அனில் ஜெயராஜ் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இலவசமாக ஐபிஎல்லை ஒளிபரப்பும் ஜியோ சினிமா
ஐபிஎல் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனில் அனைத்து போட்டிகளும் ஜியோசினிமாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் இதற்காக ஜியோ சினிமா கட்டணம் எதுவும் வசூலிக்காமல் இலவசமாக ஒளிபரப்ப உள்ளது. கூடுதலாக, ஜியோ சினிமா 4கே ஃபீட், பல மொழி மற்றும் மல்டி-கேம் பிரசன்டேஷன், ஸ்டேட்ஸ் பேக் மூலம் தரவுகளை அறிதல் மற்றும் பிளே அலோங் அம்சத்தையும் வழங்குகிறது.