இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 10 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கில் அணியின் போட்டிகளுக்கு முன்னதாக ஹாக்கி இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டது. 48 வயதான தென்னாப்பிரிக்கரான கிரேக், கிட்டத்தட்ட 25 வருட பயிற்சி அனுபவத்துடன், விரைவில் இந்திய அணியில் இணைய உள்ளார். முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரஹாம் ரீட், சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டனின் பின்னணி
கிரேக் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அயர்லாந்து ஆண்கள் ஹாக்கி அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்து ரியோ ஒலிம்பிக்கிற்கு அந்த அணியை தகுதி பெற வைத்தார். இதைத் தொடர்ந்து, அவர் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியன்களான பெல்ஜிய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் பணியாற்றியபோது தான் பெல்ஜியம் அணி டோக்கியோவில் தங்கப் பதக்கத்தை வென்றது. மேலும் 2018 இல் புவனேஸ்வரில் பெல்ஜிய அணி உலக கோப்பை பட்டத்தை வென்றபோது அவர் பெல்ஜிய பயிற்சி ஊழியர்களின் ஒரு பகுதியாக இருந்தார். தவிர தென்னாப்பிரிக்க அணியில் ஹாக்கி வீரராக கிரேக் 10 ஆண்டுகளில் 195 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.