காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : முதல் நாளில் 7 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா
நொய்டாவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், இந்தியா 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளியை வென்றுள்ளது. இந்திய வீராங்கனை ஜ்யோத்ஸ்னா சபர், 40 கிலோ இளையோர் பிரிவில், மொத்தம் 116 எடையை தூக்கி தங்கம் வென்றார். இதேபோல், அஸ்மிதா, 45 கிலோ இளையோர் & ஜூனியர் பிரிவில், மொத்தம் 136 கிலோ எடையை தூக்கி, இரண்டு தங்கம் வென்ற நிலையில், கோமல் கோஹர் 45 கிலோ சீனியர் பிரிவில் மொத்தம் 144 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். 49 கிலோ இளையோர் பிரிவில், கோயல் பார், மொத்தம் 152 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்தார்.
இந்தியாவில் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி
ஞானேஸ்வரி யாதவ், 49 கிலோ ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் 2 தங்கங்களை கைப்பற்றிய நிலையில், ஜில்லி தலபெஹெரா, 49 கிலோ சீனியர் பிரிவில் வெள்ளி வென்றார். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 52 இந்தியர்கள் உட்பட 253 பளுதூக்குபவர்கள் சீனியர், ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள மதிப்புமிக்க AWF ஆசிய ஜூனியர் மற்றும் இளைஞர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பிற்கான சோதனை ஓட்டமாகவும் இந்தப் போட்டிகள் நடக்கின்றன. மேலும், 2015ஆம் ஆண்டு புனேயில் வெற்றிகரமாக காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியை நடத்திய இந்தியா, அதன் பிறகு இரண்டாவது முறையாக இப்போட்டியை நடத்துகிறது.