மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை
கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் முழு உருவ சிலை நிறுவப்பட உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே வான்கேட் ஸ்டேடியத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார். அங்கு ஏற்கனவே ஒரு பெவிலியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை சச்சின் கொண்டாட உள்ள நிலையில், அப்போது சிலை திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சச்சினிடமும் ஏற்கனவே கூறிவிட்டதாக வான்கடே ஸ்டேடியத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை ஏப்ரல் 24க்குள் சிலை நிறுவும் பணிகள் நிறைவடையவில்லை என்றால், அக்டோபரில் ஒருநாள் உலகக்கோப்பை நடக்கும்போது திறப்பு விழாவை நடக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு முழு உருவ சிலைகள்
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்களின் முழு உருவ சிலைகள் பெரும்பாலும் எந்த மைதானங்களிலும் இல்லை. விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ஆந்திராவில் உள்ள வி.டி.சி.ஏ ஸ்டேடியம் மற்றும் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மட்டும் சி கே நாயுடுவுக்கு சிலைகள் உள்ளன. அதே நேரத்தில், அந்தந்த மாநில சங்கங்களில் பல வீரர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல்வேறு வீரர்களுக்கு மெழுகு சிலைகள் உள்ளன. கிரிக்கெட் வீரர்களின் மிகவும் பிரபலமான சிலைகளில் ஒன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மறைந்த ஷேன் வார்னேவுடையது தான். ஷேன் வார்னே உயிருடன் இருந்தபோதே அந்த சிலை எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.