சர்வதேச கபடி போட்டியில் கோவையை சேர்ந்த இந்திய வீரருக்கு ஆட்டநாயகன் விருது
இந்திய அணிக்காக நேபாளத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்ற ரியாஸ் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். கோவையை சேர்ந்த ரியாஸ் கான் சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சிறுவயது முதலே கபடி விளையாட்டில் ஆறாம் கொண்ட ரியாஸ், உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் நேபாள நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான கபடிப் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்று விளையாடினார்.
ஆட்டநாயகனுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
பல நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்திய அணி கோப்பையை வென்றது. மேலும், இந்திய அணிக்காக விளையாடிய ரியாஸ் கான் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இதையடுத்து தற்போது கோவை திரும்பியுள்ள ரியாஸ் கானுக்கு குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய ரியாஸ் கான், தமிழகத்தில் கபடி வீரர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றும், கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி மைதானங்களை உருவாக்கித் தர வேண்டும் என்று கூறினார். மேலும் கபடி வீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அளிக்க முன்வர வேண்டும் என ரியாஸ் கான் வலியுறுத்தினார்.