யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி
அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார். 19 வயதான கோகோ காஃப் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தினார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 9) நடக்கும் இறுதிப் போட்டியில் காஃப் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்காவை எதிர்த்து விளையாட உள்ளார். இதற்கிடையே, 1999 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியை எட்டிய இளம் அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ள காஃப், தனது முதல் இறுதிப்போட்டியில் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளார்.
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்
யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், இதன் மூலம் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வயதான வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவரை எதிர்த்து அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ராஜீவ் ராம் அடங்கிய ஜோடி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சனிக்கிழமை நடக்கும் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஆஸ்டின் கிராஜிசெக், ஜெசிகா பெகுலா ஜோடி அண்ணா டானிலினா, ஹாரி ஹெலியோவாரா ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.