ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்டது. எனினும், அப்போது பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அந்த போட்டி தற்போது ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டியின் முதல் நாள் காலை மட்டும் இலவசமாக போட்டியை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ பேடிஎம் இன்சைடர் உடன் கூட்டு
எஞ்சிய நாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடந்த நிலையில், போட்டியை 8,000 பேர் கண்டுகளிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போட்டியைக் காண மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் டிக்கெட்டை காட்டி இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சலுகை பேடிஎம் இன்சைடர் தளத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, சென்னை மெட்ரோவில் எந்த ரயில் நிலையத்திலும் ஏறி, போட்டி நடக்கும் இடத்தின் அருகே உள்ள அரசினர் தோட்ட ரயில் நிலையத்திற்கு இலவசமாக சென்று திரும்பலாம்.