இடியாப்ப சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) ஒரு வரலாற்று அதிர்ச்சியில், இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3-0 என இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைக் கொண்ட இந்தியாவின் வலுவான சுழல் வரிசை இருந்தபோதிலும், நியூசிலாந்து மூன்று டெஸ்டிலும் இந்தியாவை எளிதாக வீழ்த்தியது. இந்தியா சொந்த மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதல்முறையாகும். மேலும், 2000க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்தத் தோல்வி லார்ட்ஸில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் கடுமையாக பாதித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
இந்தத் தொடருக்கு முன், இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 74.24 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இருப்பினும், தொடர் தோல்வி காரணமாக, தற்போது இந்திய அணியின் ரேட்டிங் புள்ளிகள் 58.33 ஆகக் குறைத்துள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பை ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடர் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4-0 என இந்தியா வெற்றி பெற்றால், அணியின் ரேட்டிங் புள்ளிகள் 65.79 ஆக அதிகரிக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்புகள்
குறைந்தபட்சம் 4-0 என இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் தங்கள் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், வாய்ப்பை உறுதிசெய்ய முடியும். எனினும், இந்தியா ஏதேனும் ஒரு ஆட்டத்தை இழந்தாலும், போட்டியில் நிலைத்திருக்க மற்ற அணிகளின் போட்டிகளில் இருந்து சாதகமான முடிவுகள் தேவைப்படும். தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகியவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு போட்டியிடுவதால், இந்தியாவின் பாதை குறுகியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.