பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை!
பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இன்னும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டின் போது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, நாக்பூரில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க கிரீன் இன்னும் தகுதி பெறுவார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
கேமரூன் கிரீனின் முக்கியத்துவம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க ஆஸ்திரேலியா முனைப்பாக உள்ள நிலையில், இந்தத் தொடரில் கிரீனின் பங்கு அவசியமாகிறது. மற்ற நாடுகளிடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களை நம்பியிராமல், எளிதாக நுழைய வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இந்நிலையில், கேமரூன் கிரீனின் ஆல்-ரவுண்ட் திறன், அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்பதால், அவரை உடல்தகுதி பெற வைத்து இந்தியாவுக்கு அனுப்புவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. கிரீன் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும், பயிற்சியாளர் மெக்டொனால்ட், கிரீன் ஒரு மிடில்-ஆர்டர் பேட்டராக அதிக மதிப்புடையவர் என்றும், அவரை பேட்டிங்கில் வைத்து மட்டுமே இறுதி லெவன் அணியை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.