
2026 BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடத்தப்படும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு பெரிய கவுரவமாக, உலகின் மதிப்புமிக்க BWF உலக சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளை டெல்லி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்தப் போட்டிக்கு பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் போட்டி மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புகிறது. இந்தப் போட்டி குறித்து 2025 பாரிஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்தப் போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது, பேட்மிண்டனில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. 1983 இலிருந்து இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 15 பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் 2011 இலிருந்து தொடர்ந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
வீரர்கள்
பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்
பிரகாஷ் படுகோனின் வெண்கலப் பதக்கத்துடன் தொடங்கிய இந்த வெற்றிப் பயணம், பிவி சிந்துவின் ஐந்து பதக்கங்கள் மற்றும் சாய்னா நேவாலின் பங்களிப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆண் வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.சாய் பிரணீத், லக்ஷயா சென் மற்றும் ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தனிநபர் பிரிவில் பதக்கங்கள் வென்றுள்ளனர். மேலும், இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர். இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அளித்த BWFக்கு நன்றி தெரிவித்ததுடன், பாரிஸில் நடந்தப் போட்டியைப் போலவே டெல்லியிலும் சிறந்த முறையில் இந்தப் போட்டியை நடத்துவோம் என்று உறுதியளித்தார்.