ஒருநாள் உலகக்கோப்பை : ரீஸ் டாப்லிக்கு மாற்றாக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு
காயம் அடைந்த ரீஸ் டாப்லிக்கு மாற்றாக ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லியாம் பிளங்கெட் போலவே மிடில் ஓவர்களில் பிரைடன் கார்ஸ் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதால் இவரை பலரும் ஜுனியர் லியாம் பிளங்கெட் என அழைக்கின்றனர். வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெறும் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் போட்டிக்கு முன்னதாக கார்ஸ் பெங்களூருக்கு சென்று அணியுடன் இணைய உள்ளார். இருப்பினும் நான்கு வாரங்களுக்கு முன்பு கடைசியாக போட்டியில் விளையாடியதால், அவர் இலங்கைக்கு எதிரான விளையாடும் லெவனுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பிரைடன் கார்ஸின் பின்னணி
28 வயதான பிரைடன் கார்ஸ் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். ஆனால், தற்போது இங்கிலாந்து குடிமகனாக உள்ளார். இங்கிலாந்தில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் டர்ஹாம் மற்றும் வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ் அணிகளுக்காக விளையாடுகிறார். ஒரு உயரமான, சக்திவாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், லோயர் ஆர்டரில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவர் ஆவார். அவர் 2021இல் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானாலும் மிகக் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில், ஒருநாள் கிரிக்கெட்டில் 12 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதற்கிடையே, உலகக்கோப்பையில் இங்கிலாந்து தொடர் தோல்விகளால் துவண்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறாவிட்டால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கானல் நீராகும் என்பதால், இங்கிலாந்து வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்து வருகிறது.