Loading...
Hong Kong Sixes தொடர்: இந்திய அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்
ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Hong Kong Sixes தொடர்: இந்திய அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்

எழுதியவர் Vasuki
Oct 05, 2026
05:00 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட்டின் மிகவும் விறுவிறுப்பான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த குறுகிய வடிவப் போட்டியான 'ஹாங்காங் சிக்ஸஸ்' கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை டின் குவாங் ரோடு மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக அனுபவமிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து முன்னணி ஐபிஎல் நட்சத்திரங்கள் மற்றும் சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் அடங்கிய பலமான அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் அதிரடி நட்சத்திரங்கள் அடங்கிய பலமான படை

புவனேஷ்வர் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட இந்திய அணியில், ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா, தமிழகத்தின் யார்க்கர் நாயகன் டி. நடராஜன், அதிரடி பேட்ஸ்மேன்கள் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஃபினிஷிங் மன்னர்களான ராகுல் தெவாதியா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஷஷாங்க் சிங்கைத் தவிர மற்ற 6 வீரர்களும் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6 வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாடும் இத்தொடரில் அதிரடி பேட்டிங், ஆல்ரவுண்டர் பலம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு என சமபலத்துடன் இந்திய அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

சாம்பியன் பட்டத்தைக் குறிவைக்கும் இந்தியா

இத்தொடரில் 8 முன்னணி கிரிக்கெட் நாடுகள் மற்றும் 4 அசோசியேட் நாடுகள் என மொத்தம் 12 அணிகள் மோதவுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் குவைத்தை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனாகக் களம் காணுகிறது.

ஹாங்காங் சிக்ஸஸ் வரலாற்றிலேயே இந்தியா இம்முறை மிகச் சிறந்த மற்றும் வலிமையான அணியைக் களமிறக்கியுள்ளதாக ஹாங்காங் கிரிக்கெட் நிர்வாகம் பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், இம்முறை பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் புவனேஷ்வர் குமார் தலைமையிலான இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT